Inaugural 64-team BOOST Chennaiyin FC Football Championship announced    |    Dr.Paul Dhinakaran's Family Wedding reception at Vanagaram    |    The 31 Plenary Assembly of the Conference of the Catholic Bishops of India    |    Champions of ALLEN Sharp Exam Felicitated in the SCORE ceremony    |    7Up And Actress Kajal Aggarwal Bring Ponneram to Chennai    |    TAPMA Plans Huge Demonstration on 13th Dec. for Withdrawal of Plastics Ban    |    ALLEN Career Institute launches study centre in Chennai    |    Ford Inaugurates Dhruvan Ford Sales and Service Facility in Chennai    |    Chartered Accountant Training Program by Education Department    |    Stroke Awareness Walkathon by SIMS Hospital    |   
Total Visitors : site stats
Apr 16, 2015     |     GO BACK     |     Share
 
 
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியதால் ராகுல்காந்தி மிகவும் அதிருப்தி அடைந்தார். இதையடுத்து காங்கிரசுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் நடவடிக்கைகளை அவர் தொடங்கினார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 20ந்தேதி திடீரென அவர் மாயமாகி விட்டார். பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், அவர் எங்கோ சென்று விட்டது பரபரப்பாக பேசப்பட்டது. இதுபற்றி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறுகையில், ராகுல்காந்தி அரசியலுக்கு தற்காலிக விடுமுறை அளித்துள்ளார் என்று கூறினார்கள். ஆனால் அவர் எங்கு சென்றார்? என்ன செய்கிறார்? என்பதெல்லாம் மர்மமாக இருந்தது. இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை ராகுல்காந்தி டெல்லி திரும்பினார். அவர் வந்த தாய்லாந்து நாட்டு விமானம் இன்று பகல் 10.30 மணிக்கு டெல்லி பாலம் விமான நிலையத்தில் தரை இறங்கியது. விமான நிலையத்தில் தன்னை வரவேற்க யாரையும் அவர் அனுமதிக்கவில்லை. தனது பிரத்யேக காரில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். அவருக்கு பாதுகாப்பாக அவரது அதிரடிப்படை பாதுகாவலர்கள் மற்றொரு காரில் பின்னால் சென்றனர். ராகுல்காந்தி டெல்லி திரும்பிய தகவல் உறுதிபடுத்தப்பட்டதும், காங்கிரஸ் தலைவர் சோனியா உடனடியாக ராகுல் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். சிறிது நேரத்தில் பிரியங்காவும் ராகுல் வீட்டுக்கு வந்தார். 11.15 மணிக்கு டெல்லி துக்ளக் லேனில் உள்ள 12ம் எண் கொண்ட தன் வீட்டு வாசலில் ராகுல் வந்து இறங்கினார். அவரை சோனியா, பிரியங்கா இருவரும் மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர். பிறகு அவர்கள் தனி அறையில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர். காங்கிரஸ் தலைவர்கள் வேறு யாரும் இன்று ராகுலை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. ராகுல்காந்தி நாளை (வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை அவர் 2 சந்திப்புகளுக்கு நேரம் ஒதுக்கிக்கொடுத்துள்ளார். முதலில் காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்தித்து பேசுகிறார். அப்போது சில திட்டங்களை அறிவுறுத்தி பேசுவார் என்று தெரிகிறது. அதன் பிறகு விவசாயிகள் பிரதிநிதிகளையும் சந்தித்து பேச உள்ளார். சனிக்கிழமையும் அவர் காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை 19ந்தேதி டெல்லியில் காங்கிரஸ் சார்பில் நடக்கும் விவசாயிகள் பேரணியில் கலந்து கொண்டு பேச உள்ளார். விரைவில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது சீசன் தொடங்க உள்ளது. இதில் ராகுல் கலந்து கொண்டு விவாதங்களில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. அது மட்டுமின்றி காங்கிரஸ் நிர்வாகத்தில் அவர் அதிரடி மாற்றங்களை தொடங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் விரைவில் பெங்களூரில் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மற்றொரு சாரார் ஆதரவு தெரிவித்துள்ளனர். தலைவர் பதவியை ஏற்கும் முன்பே சர்ச்சையை வெடித்திருப்பதால் ராகுல் கவலை அடைந்துள்ளார் என்றாலும் அவர் தலைவர் பொறுப்பை ஏற்று அதிரடி அரசியலை தொடங்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. இதை பிரதிபலிக்கும் வகையில் ராகுல்காந்தியின் இளம் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கில் இன்று ராகுல் வீடு முன்பு திரண்டிருந்தனர். ராகுல் காரில் இருந்து இறங்கியதும் அவர்கள் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியைக் கொண்டாடினார்கள். ராகுல் காந்தி இன்று பாங்காங் நகரில் இருந்து தாய் ஏர்வேஸ் விமானம் மூலம் டெல்லி வந்தார். எனவே அவர் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஏதாவது ஒன்றில் 56 நாட்களும் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. காங்கிரஸ் நிர்வாகிகளை மாற்றும் விவகாரத்தில் சோனியாவுக்கும் ராகுலுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அதனால் தான் ராகுல் வெளிநாடு சென்றதாகவும் கூறப்பட்டது. குறிப்பாக அகமது படேலை நீக்க வேண்டும் என்பதில் ராகுல் தீவிரமாக இருந்ததால் மூத்த தலைவர்களுடன் மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. கட்சி நிர்வாகத்தில் சுதந்திரமாக செயல்பட முடியாத வருத்தத்தில் அவர் வெளிநாடு சென்றுவிட்டதாக கூறப்பட்டது. அதன் பிறகு ராகுல் தன் நீண்ட நாள் காதலியை தென்கிழக்கு ஆசிய நாட்டில் வைத்து ரகசிய திருமணம் செய்து கொண்டதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை. அதன் பிறகு ராகுல் காந்தி உருகுவே நாட்டில் இருப்பதாகவும், அவர் குளியல் அறையில் வழுக்கி விழுந்து காயம் அடைந்ததால் அந்த நாட்டில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது. இந்த மர்மங்களுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.