Annual Book Distribution    |    JBAS College Alumnae Reunion 2019    |    NALLI FASHIONS – THE NEW DESTINATION STORE FOR SILK SAREES AND GOLD JEWELLERY    |    Bringing cutting-edge experiences to more fans with the first ever Nokia 4.2    |    Advanced Hair Studio celebrates 10 years of success with brand ambassador Sourav Ganguly    |    Nano Life First time launching @ T.Nagar,Chennai    |    RISHS INTERNATIONAL SCHOOL 3'rd ANNUAL DAY 05-02-2019    |    Inaugural 64-team BOOST Chennaiyin FC Football Championship announced    |    Dr.Paul Dhinakaran's Family Wedding reception at Vanagaram    |    The 31 Plenary Assembly of the Conference of the Catholic Bishops of India    |   
Total Visitors : site stats
Mar 10, 2015     |     GO BACK     |     Share
 
 
புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் மாசி மாதத் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை திருக்கோயில்களைச் சேர்ந்த கோயில்களில் இது முக்கியமான கோயிலாகும். இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் நிகழாண்டில் பிப். 22-ல் பூச்சொரிதல் விழா மற்றும் மார்ச் 1-ம் தேதி கொடியேற்றத்துடன் மாசிப் பெருந்திருவிழா தொடங்கி மார்ச் 16 -ம் தேதி வரை 16 நாள்கள் நடைபெறுகிறது. விழாவின் தொடக்க நாளில், திருவப்பூர் குலாலர் தெருவின் திடலில் இருந்து நாட்டார்கள், ஊரார்கள் தங்கள் கிராம தெய்வமான கவிநாடு களரி பெரிய அய்யனார் கோயிலுக்கு புரவி எடுத்துச் சென்று சிறப்பு அபிஷேகம், வழிபாடு செய்தனர். தொடர்ந்து இரவு 7 மணியளவில் திருக்கோகர்ணம் அருள்மிகு திருக்கோகர்ணேசர் உடனுறை பிரஹதாம்பாள் கோயில் உற்சவ மாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று திருவப்பூர் கோயிலை அடைந்த அம்மனுக்கு காப்புக் கட்டும் வைபவம் நடைபெற்றது. இதையடுத்து, இரவு 9 மணியளவில் கொடியேற்றப்பட்டு மாசிப் பெருந்திருவிழா தொடங்கியது. விழாவையொட்டி, ஒவ்வொரு நாளும் அன்ன வாகனம், ரிஷப வாகனம், சிம்ம வாகனம், குதிரை வாகனம், முத்து பல்லக்கு போன்ற வாகனங்களில் அம்மன் திருவீதி உலா காட்சியும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை (மார்ச் 9) நடைபெற்றது. இதையொட்டி, உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடிகள், அலகு குத்திச் சென்று தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றி அம்மனை வழிபட்டனர். இதில், ஆட்சியர் சு. கணேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.எஸ். உமா, சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஆர். கார்த்திக்தொண்டைமான், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர்கள் எஸ்.வி.எஸ். வெங்கடாசலம், ஆர். வைரவன், திருவப்பூர் முத்துமாரியம்மன் அறக்கட்டளை நிர்வாகி பி.வி.ஆர். சேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கோ. ஜெயப்பிரியா, செயல் அலுவலர் ர. கருணாகரன், ஆய்வர் சி. ராமகிருஷ்ணன், மேற்பார்வையாளர் சீனி. சேதுராமன், விழாக் குழுவினர், திருவப்பூர், கவிநாடு கிராமத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் நகர காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ். பாலகுரு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டனர்.